தப்புவிக்கும் கரம்

அனுதின மன்னா

கர்த்தர் கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.  - (சங்கீதம் 107:29).
 
ரிச்சர்ட் உம்பிராண்ட் (Richard Wurmbrand) என்னும் ரோமானிய யூதர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதினால் கம்யூனிச சிறையில் அடைக்கப்பட்டு, 14 வருடங்கள் மிகவும் கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டு, தாம் கர்த்தர் மேல் வைத்த நம்பிக்கையை மறுதலிக்குமாறு வற்புறுத்தப்பட்டார். ஆனால் அவர் விடுதலையாகும் வரைக்கும் கர்த்தரை மறுதலிக்கவேயில்லை. அவர் தாம் எழுதிய பட்ங் ஞழ்ஹஸ்ரீப்ங்ள் ர்ச் ஏர்க் என்ற புத்தகத்தில், அந்த சிறைச்சாலையின் கொடூரமான சூழ்நிலையிலும் அமைதியோடும்,  சமாதானத்தோடும் எப்படி தன்னால் இருக்க முடிந்தது என்பதை ஒரு சிறு கதையின் மூலம் விளக்கி எழுதியுள்ளார்.
 
ஒரு கப்பலில், அந்தக் கப்பலின் மாலுமியோடு அவரது மனைவியும் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தக் கடலில் ஏற்பட்ட புயலினால் கப்பல் அங்கும் இங்கும் அலைமோதியது. அப்போது அந்த மாலுமியின் மனைவி அவரிடம்,  "இந்தமாதிரி கப்பல் அலைமோதி தடுமாறிக் கொண்டிருக்கும் போது உங்களால் எப்படி அமைதியாக இருக்க முடிகிறது? "என்றுக் கேட்டாள். அப்போது அந்த மாலுமி அருகிலிருந்த ஒரு கத்தியை எடுத்து தன் மனைவியின் நெஞ்சுக்கு நேராக வைத்து,   "நீ இப்போது எப்படி அமைதியாகவும் பயப்படாமலும்  இருக்கிறாய்" என்றுக் கேட்டார். அதற்கு அவள், "நான் ஏன் பயப்படவேண்டும்? இந்தக் கத்தி என் அன்புக் கணவனது கரங்களில் அல்லவா இருக்கிறது? நீங்கள் என்னை நேசிக்கிறபடியால், என்னை குத்த
மாட்டீர்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியும்" என்றுக் கூறினாள்.
 

அப்போது அந்த மாலுமி,  "அதுதான் நான் அமைதியாய் இருப்பதன் காரணமும்கூட, இந்த அலைகளும் கொந்தளிப்பும் என் அன்பு தகப்பனின் கரங்களில் இருப்பதால், அவருக்கு  இந்த அலைகளும் அடங்கும் என்பதால் நான் இந்தப் புயலைக்  குறித்து பயப்படாமல் இருக்கிறேன்." என்று கூறினார்.
 

அன்பானவர்களே, உங்கள் வாழ்க்கையில் புயல் வீசிக் கொண்டிருக்கிறதா? என்ன செய்வது என்று
தெரியாமல் கலங்கிக் கொண்டிருக்கிறீர்களா? எங்கு போவது என்று தெரியாமல் நிலைத் தடுமாறிக்
கொண்டிருக்கிறீர்களா? நமக்கு ஒரு தேவன் உண்டு. அவர் காற்றையும் கடலையும் அதட்டி அமைதலாயிரு என்று கட்டளையிட்டு புயலை அமைதலாக்கினவர். அவர் உங்க்ள வாழ்க்கையில் ஏற்படும் புயலையும் அலைகளையும், காற்றையும் அமைதலாக்க வல்லவர். கவலைப்படாதீர்கள். சோர்ந்துப் போகாதிருங்கள். 'என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு
கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்'. - (எரேமியா -33:3)  என்றவர் இன்றும் மாறாதவராகவே இருக்கிறார்.

அவர் பட்சபாதமுள்ள தேவனில்லை. அவரை நோக்கி கூப்பிடும் உங்களிடத்தில் நிச்சயமாகவே வந்து அற்புதங்களை செய்வார்;. நீங்கள் கலங்க வேண்டாம். தேவனை உறுதியாய் பற்றிக் கொள்ளுங்கள். நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன், நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை,  நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய், அக்கினி  ஜுவாலை உன்பேரில் பற்றாது- (ஏசாயா 43:2). என்று சொன்னவர் உங்களோடு இருக்கிறார்.  நீங்கள் இந்தப் புயலில் மூழ்கிப் போவதில்லை கர்த்தரின் கரம் உங்களை தாங்கும் தப்புவிக்கும் ஆமென் அல்லேலூயா!
 

      கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்

      சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா

      கடலினை கண்டித்த கர்த்தர் நீரல்லவோ

      கடவாத எல்லையை என்வாழ்வில் தாரும்

 

ஜெபம்:
எங்களது அடைக்கலமும் புகலிடமுமாகிய எங்கள் நல்ல தகப்பனே, எந்த புயல் வந்து மோதினாலும்
நாங்கள் அசைக்கபடாதபடி எங்கள் நங்கூரமாக நீர் இருந்து எங்களை தாங்குவதற்காக உமக்கு கோடி ஸ்தோத்திரம். இந்த உலகத்தில் இருப்பவனிலும் எங்களுக்குள் இருக்கிற நீர் பெரியவர், பெரிய காரியங்களை எங்களுக்காக செய்கிறவர்.  அதற்காக நன்றி தகப்பனே.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி.  எங்கள் துதிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்  ஏறெடுக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
 
 

கர்த்தரின் பணியில்

அனுதின மன்னா குழு

anudinamanna@gmail.com)